இந்தியத் தொல்லியல் துரையின் தந்தை சர். அலெக்சாண்டர் கன்னிங்காம்

 இந்தியத் துணைக்கண்டத்தை ஆட்சி செய்த பிரிட்டிஷார், இந்தியாவைப் புரிந்து கொள்ள அதன் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது, இந்தியாவிற்கென்று ஆதாரப்பூர்வமான வரலாறு எதுவுமில்லை என்பதை உணர்ந்து வரலாற்றை கட்டமைக்க முனைந்தனர். அவ்வாறு கட்டமைக்க முனைந்தவர்களுள் ஒரு சாரார், பழங்கால கட்டிடங்கள், பொருட்கள், பதிவுகள் என்று தேடித் தேடி, இந்திய வரலாற்றைக் கட்டமைப்பதில் ஈடுபட்டனர். அப்பணியில், அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு உதவியாளர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் வேதியப்பண்பாட்டினராக இருந்ததால், அந்த ஆய்வுகளுக்கு வேதப் பண்பாட்டுச் சாயத்தைப் பூசவே முனைந்தனர்.


இது ஒருபுறம் என்றால், பழங்கால, தொல்லியல் பொருட்கள், கட்டிடங்களைத் தேடிய இடங்கள் மிகவும் சவாலான பகுதிகளாக இருந்தன. மேலும், பிரிட்டிஷார்களுக்கு இந்திய தட்பவெப்பம் மிகப்பெரும் உடல் உபாதைகளைக் கொடுத்தது. ஆயினும், தங்களுக்கேயுரித்தான ஆர்வத்தோடு, கிட்டத்தட்ட வழக்கொழிந்த மொழிகளைக் கட்டமைப்பது, தொல்லியல் ஆய்வுக்கான முறைகளை நேர் செய்வது, அதன் மூலம் வரலாற்றைக் கட்டமைப்பது, அதனைப் பதிப்பிப்பது என்று தொடர்ந்து இயங்கி இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில், புனைவுகளால் புதைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் பண்பாட்டை, ஆதாரப் பூர்வமாகக் கட்டமைத்தனர். அவ்வாறு அவர்கள் கட்டமைத்தபோது, மீட்டெடுக்கப்பட்ட பண்பாடு பௌத்தம். இத்தகைய அரும்பணியைச் செய்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் உழைப்புப் போற்றத்தக்கது.

Sir Alexander Cunningham, the father of Indian archaeology



இதற்காக உழைத்த பல ஆங்கிலேய அதிகாரிகளுள் மிக முக்கியமானவர் சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் . 1861ம் ஆண்டு இந்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்ட அவர், பின்னாளில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை ( Archaeological Survey of India ) நிறுவினார். இதன் காரணமாக அவர் இந்தியத் தொல்லியல் துரையின் தந்தை என்று போற்றப்படுகிறார். அவரின் பிறந்த நாள் 23 ஜனவரி 1814 ஆகும்.

பௌத்தத்தை மீட்டெடுக்க உதவிய அவரின் ஆய்வுகள் பல நூல்களாக வெளியிடப்பட்டன. அவற்றுள் சில தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • Bhilsa Topes (1854), a history of Buddhism
  • The Stupa of Bharhut: A Buddhist Monument Ornamented with Numerous Sculptures Illustrative of Buddhist Legend and History in the Third Century B.C.
  • Mahâbodhi, or the great Buddhist temple under the Bodhi tree at Buddha-Gaya

அமைதிக்கான நடைப்பயணம் (Walk for Peace)

அமைதிக்கான நடைப்பயணம் Walk for Peace என்ற நல்நோக்கத்தோடு நம்பிக்கை, அமைதி, அன்பு, ஒன்றுபட்ட வாழ்வு மற்றும் கருணை குறித்த விழிப்புணர்வை அமெரிக்க நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் பரப்புவதற்காக மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் மொத்தம் 19 பேரும், அலோகா என்ற ஒரு விசுவாசமான நாயுடன் டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்திலிருந்து வாஷிங்டன், டி.சி. வரை 120 நாட்களில் 3700 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்
2025ஆம் ஆண்டு அக்டோபர் 26-ல் ஃபோர்ட் வொர்த், டெக்சாஸ் ஆரம்பித்த இந்த நடைப்பயணம் டெக்சாஸ் ➜ மிசிசிப்பி ➜ ஜார்ஜியா ➜ வட கரோலினா 3700 கி.மீ கடந்து 2026 பிப்ரவரி மாதம் வாசிங்டன் டிசியில் முடிவடைய உள்ளது.
கொட்டும் மழையிலும், கடுமையான குளிரிலும் இந்த நடைப்பயணம் எங்கும் தொய்வில்லாது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. ஜனவரி 10 இன்று 77-வது நாளாக நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நகரத்தையும் கடக்கும் போது அரசு மரியாதையுடன் காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து அனுப்பி வைக்கிறது. மக்கள் ஆங்காங்கே திரண்டு நின்று பூக்களை கொடுத்து வணங்கி வாழ்த்தி தங்களால் முடிந்த பொருட்களை, உணவினை தானம் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார்கள். ஆங்காங்கே தம்ம போதனைகளும், பெளத்த பூஜைகளும், சுத்தாக்களும் சொல்லப்பட்டு இந்த பயணத்தை தொடர்கின்றனர்.

பௌத்தக் கொடி நாள்

 ஜனவரி_08 - பௌத்தகொடிநாள்



ஐந்து நிறங்களைக் கொண்ட பௌத்தக் கொடி சுமார் 60 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இக்கொடியை பௌத்த சிந்தனையாளர் கர்னல் ஹென்றி.ஸ்டீல் ஆல்காட் அவர்கள் வடிவமைத்தார். ஆல்காட் இலங்கைக்குச் சென்று பௌத்தம் குறித்த உரையாடலை நிகழ்த்தியகாலத்தில் இக்கொடி அங்கு அறிமுகமானது. ஆல்காட்டும் அனகாரிக  தர்மபாலாவும் இக்கொடியை ஜப்பான் பேரரசருக்கும் பர்மா அரசுக்கும் 1889 இல் வழங்கினார்கள்.

 பல திருத்தங்களுடன் உருவாக்கப்பட்ட இக்கொடி,1885 இல் கொழும்பு பௌத்தக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதன்முதலாக இலங்கை பத்திரிக்கையான சரசவி சந்தரேச(sarasavi sandaresa)’யில் பிரசுரிக்கப்பட்டது. 1886 ஆண்டின் வைசாக தினத்தில் கொழும்புவில் ஏற்றப்பட்டது.

1950 மே 25 ஆம் நாள் கொழும்புவில் உலக பௌத்தர்கள் அமைப்பு (World Fellowship of Buddhist)’ இலங்கையைச் சார்ந்த பௌத்த அறிஞரும், கல்வியாளருமான பேராசிரியர் குணபால பியாசேன மாலசேகரா தலைமையில் கூடியது. 27 நாடுகளிலிருந்து பௌத்தர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் பங்கேற்றார். குணபால பியாசேன   மாலசேகரா அவர்கள்பௌத்தக்கொடியை சர்வதேச பௌத்தக்கொடியாக ஆக்க வேண்டுமென்று அந்த மாநாட்டில் பரிந்துரைத்தார். அதன்படி இக்கொடி சர்வதேச பௌத்தக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.

கொடி ஐந்து நிறப் பட்டைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிறமும் பௌத்த வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது.

1.நீல நிறம்- அன்பு, கருணை மற்றும் உலக அமைதி ஆகியவற்றைக்  குறிக்கிறது.

2.மஞ்சள் நிறம்- நடுவுநிலை (மத்திம)  வாழ்க்கையைக் குறிக்கிறது.

 3.சிவப்பு நிறம்- ஒழுக்கம், விழிப்புணர்வு, சாதனை ஆகிவற்றுக்கான நன்முயற்சிகளைக்   குறிக்கிறது.

 4.வெண்மை நிறம் - மாசற்ற  தம்மத்தைக் குறிக்கிறது.

5.காவி நிறம்- புத்தரின் போதனைகளையும் ஞானத்தையும் குறிக்கிறது.

 ஆறாவதாகவும் ஒரு வண்ணம் இக்கொடியில் துவக்கத்தில் இருந்தது. அது, இந்த ஐந்து நிறங்களையும் கலந்த கலைவை நிறமாக இருந்தது. பிறகு திருத்தப்பட்டக் கொடியில் ஐந்து நிறங்களே ஏற்கப்பட்டன. மேலும், ஐந்து நிறப் பட்டைகள், பஞ்ச சீலங்களையும் நினைவுபடுத்துகின்றன.

கொடியில் உள்ள ஐந்து நிறப்பட்டைகள் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் இருப்பது பௌத்தம் எங்கும், எத்திசையிலும், சமமாகப் பரவவேண்டும் என்பதைக் குறிக்கிறது.


மார்கழியில் மக்களிசையில் அம்பேத்கரிய வினா விடைப் போட்டி!

மார்கழியில் மக்களிசை நிகழ்வில் கலந்து கொள்வோருக்கு ஒரு வினாவிடை நிகழ்வை நடத்தலாம் என்று முடிவெடுத்தோம்.  அதன் அடிப்படையில் 20 கேள்விகளை பண்டிதர் அயோத்திதாசர் முதல் பாபாசாகேப்பின் பௌத்தமேற்பு வரை, தொகுத்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் online மூலம், பதிலளிக்கும் படியும், பதிலளித்தவர்கள், தங்களின் விடைகளையும், சரியான விடைகளையும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த வினா விடையை வடிவமைத்தோம்.  இந்தக் கேள்விகளில் சில, பட்டியலின மக்களின் வரலாற்றில் உள்ள திரிபுகளை நேர் செய்யும் வகையிலும் தேர்வுசெய்யப்பட்டது.

இந்த வினா விடைப் போட்டியில், நிகழ்விற்கு வந்திருந்த பலரும், ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  குழுவாக நண்பர்களோடு வந்தவர்களில் ஒரு சிலர் தங்களுக்குள் ஒரு போட்டியாக பாவித்துக்கொண்டும், மற்றும் சிலர், சேர்ந்து விவாதித்தும் பதிலளித்தனர்.  

இந்தப் போட்டியில் 20 வினாக்களுக்கும் சரியான பதிலளித்தவர்களை அழைத்து பரிசளிக்கப்பட்டது.  இரு சகோதரிகளுக்கு நிலா தம்மாவின் அனுசுயா அவர்களும், மற்றவர்களுக்கு பேராசிரியர். ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் பரிசுகளை வழங்கினர்!








இந்த வினா விடையை நீங்களும் முயற்சி செய்ய விரும்பினால், இந்த இணைப்புகளைச் சொடுக்கி கலந்து கொள்ளலாம்.  

தமிழில் >> https://bit.ly/ta-quiz

ஆங்கிலத்தில் >> https://bit.ly/en-quiz



திருச்சியில் பெளத்தமேற்பு மற்றும் காதணிவிழா

 திருச்சியில் அஜய் ரோஷிணி இணையரின் குழந்தைக்கு மொட்டை அடித்து, காதணி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமல்தாஸ் குடும்பத்தினர் பெளத்தமேற்றனர். நிகழ்வு முடிந்து போதி விகாருக்கு சென்று புத்த பூஜை செய்து திரும்பினோம்.

பெளத்தமேற்பு


அஜய் ரோஷிணி இல்லம்

போதி விகார்