எழுதாக் கிளவி ( வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள் ) : ஸ்டாலின் ராஜாங்கம்

"தன் வரலாற்றை அறியாதவரால் வரலாறு படைக்க முடியாது" என்கிறார் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர்.

மேலும், "பௌத்தத்துக்கும் பார்ப்பனீயத்திற்குமிடையேயான போராட்டமே இந்தியாவின் வரலாறு" என்கிறார்.  

பௌத்தம் இம்மண்ணில் தழைத்தோங்கி கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு என்று அனைத்துத்தளங்களிலும் உச்சத்தைத் தொட்ட இந்தியா அதன் பின்னர் நிகழ்ந்த எதிர்புரட்சியால் வீழ்த்தப்பட்டது பௌத்தம்.  

பௌத்தர்கள் பல இன்னல்களுக்குள்ளாகி தங்கள் வரலாறை மறக்கடிக்கப்பட்டு வந்ததின் விளைவாய், பட்டியலினமாகத் தொகுக்கப்பட்டவர்கள் தங்களின் வேர்களான வரலாற்றைத் தொலைத்து தங்கள் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக வளம் வந்தனர், வருகின்றனர்.

ஒரு சமூகத்தை அழிக்க, முடமாக்க வேண்டுமென்றால் அவர்களின் வரலாற்றை அழித்தால் போதும் என்பர்.  அதுபோல, பட்டியலின மக்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டு, காலம் காலமாய், இப்புவியில் மனிதன் தோன்றியது முதலே ஒடுக்கப்பட்டவர்கள் அவர்கள் என்று ஒருவிதக் கற்பிதத்தை விதைக்கப்பட்டுள்ளது இம்மண்ணில்.

அம்மக்களின்  வரலாற்றை மீட்டெடுப்பது பட்டியலின மக்கள் சுயமரியாதையுடன் தங்களின் விடுதலையை வென்றெடுக்க வழிவகுக்கும்.  அத்தகைய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை பட்டியலின சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் பலர் செய்துவருவது செயற்கரும் செயலாகும்.

அத்தகையவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்  ஸ்டாலின் ராஜாங்கமும், ஜெ. பாலசுப்பிரமணியமும்  ஆவர்.


ஸ்டாலின் ராஜாங்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த ஸ்டாலின் ராஜாங்கம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.  தமிழ்ப் பௌத்தம், தமிழக தலித் இயக்க வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் சார்ந்து இயங்கிவருபவர்.

ஜெ. பாலசுப்பிரமணியம்


ஜெ. பாலசுப்பிரமணியம், திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்.  சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் ( MIDS ) ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.  மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தலித் வரலாறு, அரசியல் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.



காலச்சுவடு பதிப்பகத்தால் 21 மே 2017ல் "தலித்  செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம்" உடன் இணைந்துவெளியிட்டப் புத்தகங்கள் :


ஜீவிய சரித்திர சுருக்கம்




"ஜீவிய சரித்திர சுருக்கம்" என்று ராவ் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் வெளியிட்ட புத்தகத்தின் பதிப்பாசிரியராகவும்,  "எழுதாக் கிளவி"யையும் ஸ்டாலின் ராஜாங்க"ம் வெளியிட்டார் , 

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை


"சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை" எனும் தலைப்பில் 1869 முதல் 1943 வரை வந்த தலித் இதழ்களின் தொகுப்பையும், 

பூலோகவியாஸன்

"பூலோகவியாஸன்"எனும் தலித் இதழின் தொகுப்புகளை எழுத்தாளர் ஜெ. பாலசுப்ரமணியம் தொகுத்தும், பதிப்பித்தும்,வெளியிட்டார்.

*******.

எழுதாக் கிளவி

"எழுதாக் கிளவி" இரண்டு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது.  அவை "நினைவுகளில் நிலைபெறும் வரலாறு" மற்றும் "வாசிப்பில் வசப்படும் வரலாறு".

"நினைவுகளில் நிலைபெறும் வரலாறு" ஆறு கட்டுரைகளைச் சுமந்து வருகிறது.

"சிந்து, சிலை, சின்னம்" எனும் முதல் கட்டுரை "ஜாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வட்டார வராலாற்றை"தாங்கி வருகிறது.  1928ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் நாள் தன்னைத்தாக்க வந்த  ஜாதிவெறிக் கூட்டத்தை, ராணுவத்தில் பணிபுரிந்த அங்கம்பாக்கம் குப்புசாமி அவர்கள் கையாண்ட விதத்திலிருந்து தொடங்கி, கக்கன் அவர்கள் பிறந்த ஊரான தும்பைப்பட்டியின் அருகிலிருக்கும் வஞ்சிநகரத்தைச் சார்ந்த V. கந்தன், ரெட்டியூர் பாண்டியன் என்று விரிகிறது இக்கட்டுரை.  

"வரலாற்றை வழிமறிக்கும் வெகுமக்கள் நினைவுகள்" எனும் தலைப்பிலான இரண்டாம் கட்டுரையில், ஆனந்த தீர்த்தர், ஜார்ஜ் ஜோஸப், பென்னிகுயிக் ஆகியோரின் செயல்பாடுகளை விவரித்துச் செல்கிறது.

"கக்கன், சிவாஜி சிலைகள்: பணிவும் பெருமிதமும்" எனும் மூன்றாம் கட்டுரை, ஒரே இடத்தில் நிறுவப்பட்ட இருவேறு சமூகம் மற்றும் செயல்பட்ட தளங்களைக் கொண்ட ஆளுமைகள் நினைவுறுத்தப்படும் சமூகத்தின் தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது.

"டி. எம். மணி என்றொரு தலித் தலைவர்" எனும் அடுத்தக்கட்டுரை பட்டியலினத்தில் பிறந்து "டி. எம். உமர் பாரூக்"  என்று இஸ்லாமை ஏற்றப்பிறகு அறியப்பட்ட ஆளுமையை அவரின் செயல்பாடுகளை விவரித்து செல்கிறது.

'பொன்னுத்தாய் ஸ்கூல்: தலித் கல்வி வரலாற்றில் சொல்லப்படாத இன்னுமொரு கதை" எனும் தலைப்பில் 1952லேயே தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட பள்ளியினைப் பற்றி விவரிக்கிறது ஐந்தாம் கட்டுரை.

"பௌர்ணமி குப்புசாமி: தலித் வரலாற்றின் அறியப்படாத மற்றுமொரு ஆளுமை" எனும் கட்டுரை பௌர்ணமி அவர்களின் செயற்பாடுகளில் முக்கியமானது பௌத்தப் பணிகளென்றும், அவர் "பௌர்ணமி" என்ற பெயரில் மாதமிருமுறை வெளிவரும் இதழை  நடத்தியவர் என்ற தகவலும் இச்சமூக மாற்றமென்பது ஒரு தொடரோட்டமே என்பதற்கு அத்தாட்சியாய் உள்ளது.

இக்கட்டுரைகள் அனைத்தும் பெரும்பாலும் எந்தவித  பதிவுகளுமின்றி மக்களின் நினைவுகளோடே பயணித்து மீட்டெடுக்கப்பட்டவை.  இவற்றிற்காக பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கின்றார் ஸ்டாலின் ராஜாங்கம்.

இரண்டாம் பிரிவான "வாசிப்பில் வசப்படும் வரலாறு"தனில் முதல் கட்டுரையான  "இந்தி எதிர்ப்புப் போராட்டம் - தலித் தலைமையும் தமிழ் அடையாளமும்" எனும் கட்டுரை அன்னை மீனாம்பாள் அவர்களின் பங்கும் அதன் மூலம் பட்டியலின மக்களின் பங்கெடுப்பும், அவர்கள் பிற்காலத்தில் எவ்வாறு அணுகப்பட்டனர் என்றும் விவரிக்கின்றது. 

"தங்கை வீரம்மாளும் தமையன் வீராசாமியும்" எனும் கட்டுரை பட்டியலினத்தவராய் பிறந்து பாபாசாகேப் கொள்கைகளை ஏற்று நடந்துவரும், சூழலுக்கேற்றவாறு தான் இயங்கும்விதத்தை மாற்றியமைத்துக் கொண்டவறும் பற்றிய ஒரு ஒப்பீடாக, சமூகத்தின் இயக்கத்தை தெளிவாய் விவரித்துச் செல்கிறது. 

"கருங்காலிகளும் நன்றி கொன்றவர்களும்  : எம்.சி. ராஜாவின் அனுபவங்கள் வழியாக நீதிக்கட்சி, காங்கிரசு பற்றிய சிறு குறிப்புகள்" எனும் கட்டுரை, பட்டியலின மக்கள் படித்தறிய வேண்டிய மிக முக்கியமான கட்டுரை எனலாம்.  ஏனெனில், இன்றளவும், பொதுப்புத்தியிலும் பட்டியலின மக்களிடமும் எம்.சி.ராஜா அவர்களின் "பூனா ஒப்பந்தம்" சார்ந்த எதிர்மறை நிகழ்வுகளே பரவலாக காணப்படும் காலத்தில், பிற்காலத்தில் அவருள்  ஏற்பட்ட மாற்றம் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது போன்றவை தெரிந்தோ, தெரியாமலோ இருட்டடிப்பு செய்ய்யப்படுகிறது.

நீதிக்கட்சியின் வரலாற்றில் "டி. எம். நாயர் கலந்து கொண்ட ஸ்பர்ட்டாங்க் சாலைக் கூட்டம்"தனைப்பற்றி அதன் தாக்கத்தைப் பற்றி விவரிக்கின்றது அடுத்த கட்டுரை. 

"நந்தனும் நந்தனாரும் : இருபதாம் நூற்றாண்டு தலித் அரசியல் செயற்பாடுகளைக் கட்டமைத்த இருவேறு போக்குகள்" எனும் கட்டுரை "நந்தன், நந்தனார்" என்று சமூகத்தில் உள்ள கதையாடல்கள் அதன் விளைவுகளை விவரித்துச் செல்கிறது.  

இறுதிக் கட்டுரையாக "திராவிடன் பறையன் தமிழன்" எனும் கட்டுரை பெயர்கள் எனும் பொருளைத் தாண்டி சமூக, அரசியல் அடையாளங்களாக நிலைபெற்று தமிழ்நாட்டு சமூக அரசியல் சூழலுக்குள் புரியும் வினையை விவரிக்கின்றது.

********

பட்டியலின மக்களின் வரலாற்றை மீட்கும் அரிய பொக்கிஷமான படைப்புகள் "எழுதாக் கிளவி", "ஜீவிய சரித்திர சுருக்கம்" "பூலோகவியாசன்" மற்றும் "சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை" ஆகும்.

பதிப்பகம் : காலச்சுவடு 


அன்னை மீனாம்பாள் சிவராஜ்

அன்னை மீனாம்பாள் அவர்கள் ஒரு முக்கியமான பட்டியலின பெண் ஆளுமை.  


Annai Meenaambal Reading "The Mail"

அன்னையின் பாட்டனார் மதுரைப் பிள்ளை பர்மாவில் புகழ்பெற்ற செல்வந்தர்.  அவரைப்பற்றி புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு "மதுரை பிரபந்தம்" என்றழைக்கப்படுகிறது.  அதன் காரணமாய் அன்னை ரங்கூனில் இளம்கலை படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பினார் என்றறியப்படுகிறது.  

அவருடைய சமூகப்பணி 1928ல் "சைமன் கம்மிசன்" தனை  ஆதரித்து அவரளித்த உரையிலிருந்து ஆரம்பிப்பதாய் அறியப்படுகிறது.  "ஜாதி இந்துக்கள்" சைமன் கமிஷனை நிராகரிக்க வேண்டும், அதன் எண்ணம் இந்தியாவின் மீதான அக்கறையில்லாத தனத்தை காட்டுவதாய் கூறிய தருணத்தில், அன்னை மீனாம்பாள் பட்டியலின உரிமைகளை மீட்டெடுக்க சைமன் கமிஷனை ஆதரித்தார்.

அன்னையின் பெரியப்பா வேணுகோபாலப்பிள்ளை கடப்பை நகராட்சியின் ஆணையராக இருந்தார்.  1917ம் ஆண்டில் டி.எம். நாயர் உரையாற்றிய ஸ்பர் டாங்க் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர்.  ஆதிதிராவிடர் அரசியல், நீதிக்கட்சி தொடர்பு என்ற அளவில் அவருக்கு தொடர்பு இருந்தது.  இப்பின்னனணியில் மீனாம்பாளுக்கும் நீதிக்கட்சி தொடர்பு இருந்துவந்தது. மீனாம்பாள் தரும் குறிப்பின்படி ராஜாஜி அரசின் இந்திப்பட அறிமுகத்தின்போது ஈட்டுக்குவந்த சி.டி.நாயகம் ராஜாஜியின் செயலை பிராமணர் அரசியலாக விளக்கியதின் தொடர்ச்சியில் அப்போராட்டத்தில் மீனாம்பாள் ஈடுபாடு காட்டத் தொடங்கினார் என்று தெரிகிறது.  அதாவது பிராமண எதிர்ப்புக்கு கருத்தின் தொடர்ச்சியிலேயே அவரின் போராட்ட ஈடுபாடு தொடங்கியதாக இதுவரையிலான குறிப்புகள் வழி அறிய கிடைக்கிறது.  அதேவேளையில் பின்னர் தொடர்பும் இல்லாமல் இருந்ததும் நடந்திருக்கின்றது.

1937 ஆகஸ்ட் 10ல் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று ராஜாஜி பேசியது முதல் தமிழகமெங்கும் சவைத்த தமிழறிஞர்களால் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு சென்னை நகரை மையமாகக் கொட்டபோதுதான் போராட்டம் மறியல், கைது என்று அடுத்த கட்டத்திற்குச் சென்றது அதாவது போராட்டம் அதுவரை பேசி முன்னெடுத்த வந்த புலமைக் குழாத்தினரிடமிருந்து மக்கள் திரள் போராட்டமாக மாறியது.  

சென்னை நகரத்தின் இந்தி எதிப்ப்புப் பிரச்ச்சார பொறுப்பை மீனாம்பாள் சிவராஜ் ஏற்றிருந்தார்.  கற்றறிந்தவர்களின் கருத்தியல் பிரச்சாரமாக இருந்த எதிர்ப்பு வெகுமக்கள் போராட்டமாக மாறியதற்கு மீனாம்பாள் பங்கு முக்கியமானதாக அமைந்தது.  அவரது தலைமையில் ஏராளமான ஆதிதிராவிடர்கள் இந்தி எதிர்ப்புத் தொண்டர்களாகப் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.  

மீனாம்பாள் அவர்கள் எதனையும் நேருக்கு நேராய் கேள்வி கேட்கும் மனத்திடம் படைத்தவராய் இருந்தார்.  அவரின் மனத்திடத்திற்கு ஒரு ஆதாரமாய் இருப்பது மொழிப்போராட்டத்தின் போது "இராஜமகேந்திரபுரம் ஸ்டாலின் ஜெகதீசன் அவர்களின் உண்ணா நோன்பு" குறித்த நிகழ்வு ஓன்று.

ஜெகதீசன், 1938 மே 1 முதல் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.  1938 ஜூன் 10ல் சென்னையில் நடைபெற்ற கூட்டமொன்றில் "இந்த ஜெகதீசன் இறந்தால், அவர் பிணத்தை எங்கு வைத்துக் கொளுத்துவது என்வதைத்தான் இப்போது யோசிக்க வேண்டும்.  இறந்த ஜெகதீசனை முதன் மந்திரி வீட்டில் வைத்துக் கொளுத்துவதா அல்லது யார் இறந்தாலும் இருக்கட்டும் எனக்குக்கவலையில்லை என்று கூறும் கவர்னர் மாளிகைக்கு முன்வைத்துக் கொளுத்துவதா என்பதே கேள்வி" என்று அண்ணாத்துரை உரையாற்றினார்.

முதலில் இந்த உண்ணாநோன்பு தி.நகர் செ.தெ. நாயகம் இருப்பிடத்தில் தொடங்கப்பட்டதாகவும் பின்னர் மீனாம்பாள் வீட்டிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.  பெரியாரும் ஜெகதீசனை மீனாம்பாள் வீட்டில் சந்தித்திருக்கின்றார்.  ஜெகதீசன் பகலில் உண்ணாமலும் இரவில் யாருக்கும் தெரியாமல் உணவு உட்கொள்பவராகவும் இருப்பதை மீனாம்பாள் அம்பலப்படுத்தினார்.  இதனால் போராட்டக் காரர்களுக்கு மீனாம்பாள் மீது அதிருப்தி ஏற்பட்டது.  இதைப்பற்றி பெரியாரும் மீனாம்பாளும் பேசிக்கொள்ள முடியாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.  ( பின்னாளில் பெரியார் ஜெகதீசனை "காங்கிரசின் ஒற்றர்" என்று குறிப்பிட்டதாக அறிய முடிகிறது )

1938 நவம்பரில் இந்து தியோலாஜிக்கல் உயர்நிலைப்பள்ளி முன் நடந்த மறியலில் முதன்முதலாக மகளிரும் பங்கேற்றனர்.  இதற்குப்பின்னர் நடந்த மாநாடு ஒன்றி மூலம் போராட்டம் முழுமையாக பெரியார் தலைமைக்கு சென்றது.

Annai Meenambal in the Chennai Meeting
அன்னை மீனாம்பாள் சென்னை மாநாட்டில்


இந்தி எதிர்ப்பையொட்டிச் சென்னையில் 13.11.1938ல் தமிழ்ப் பெண்கள் மாநாடு நடந்தது  இதில் "திருவரங்கம் நீலாம்பிகையம்மையார், தருமாம்பாள், ராமமிருதம் அம்மையார், பண்டிதை நாராயணி அம்மியார் இன்ன பிறர்" கலந்து கொண்டனர்.  இம்மாநாட்டு ஒருங்கிணைப்பில் பெரும்பங்களித்தவர் மீனாம்பாள்தான்.  சென்னை நகரில் பெண்களைத் திரட்டியதில் அவர் பங்கு முதன்மையாயிருந்தது.  மாநாட்டுக்கோடியை அவர்தான் ஏற்றினார்.  இம்மாநாட்டில் தான் ஈவெராவிற்கு "பெரியார்"எனும் பட்டம் மீனாம்பாள் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, வழங்கப்பட்டது.  

"தீண்டாமையை ஒழிப்பது ஆண்களை விட பெண்களின் கையிலேயே உள்ளது" என்று 1927ல் டிசம்பர் 25ல் மனுஸ்ம்ரிதியை எரித்து உரையாற்றிய பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் அன்னை மீனாம்பாளை சகோதரி என்றே பாசத்துடன் அழைத்தார்.


தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் முதல் தலைவராக பதவி வகித்தார். 1944ல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்தியா பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டை தலைமைதாங்கி நடத்தினார்.  அம்மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் கலந்துகொண்டார்.

மே 6, 1945ல் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டிற்கும் அன்னை மீனாம்பாள் தலைமை தாங்கினார்.  அந்த மாநாடு நிறைவடைந்த பின்னர், பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் அவர்கள் அவர் வீட்டில் அவரே சமைத்து உணவளித்ததை மீனாம்பாள் நினைவுகூர்ந்திருப்பதாக அறிய முடிகிறது.

சமூகத்தலைவராக மட்டுமில்லாமல் அன்னை அவர்கள், துணைமேயர், ஆனரி பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் , சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் , தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர், சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் , போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர் , S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்), சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் , சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை, பதவிகளை வகித்தார். 

நூற்பட்டியல்:
"இந்தி எதிர்ப்புப் போராட்டம் : தலித் தலைமையும் தமிழ் அடையாளமும்" நூல்: எழுதாக் கிளவி, காலச்சுவடு பதிப்பகம்