Showing posts with label annai meenambal sivaraj. Show all posts
Showing posts with label annai meenambal sivaraj. Show all posts

அன்னை மீனாம்பாள் சிவராஜ்

அன்னை மீனாம்பாள் அவர்கள் ஒரு முக்கியமான பட்டியலின பெண் ஆளுமை.  


Annai Meenaambal Reading "The Mail"

அன்னையின் பாட்டனார் மதுரைப் பிள்ளை பர்மாவில் புகழ்பெற்ற செல்வந்தர்.  அவரைப்பற்றி புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு "மதுரை பிரபந்தம்" என்றழைக்கப்படுகிறது.  அதன் காரணமாய் அன்னை ரங்கூனில் இளம்கலை படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பினார் என்றறியப்படுகிறது.  

அவருடைய சமூகப்பணி 1928ல் "சைமன் கம்மிசன்" தனை  ஆதரித்து அவரளித்த உரையிலிருந்து ஆரம்பிப்பதாய் அறியப்படுகிறது.  "ஜாதி இந்துக்கள்" சைமன் கமிஷனை நிராகரிக்க வேண்டும், அதன் எண்ணம் இந்தியாவின் மீதான அக்கறையில்லாத தனத்தை காட்டுவதாய் கூறிய தருணத்தில், அன்னை மீனாம்பாள் பட்டியலின உரிமைகளை மீட்டெடுக்க சைமன் கமிஷனை ஆதரித்தார்.

அன்னையின் பெரியப்பா வேணுகோபாலப்பிள்ளை கடப்பை நகராட்சியின் ஆணையராக இருந்தார்.  1917ம் ஆண்டில் டி.எம். நாயர் உரையாற்றிய ஸ்பர் டாங்க் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர்.  ஆதிதிராவிடர் அரசியல், நீதிக்கட்சி தொடர்பு என்ற அளவில் அவருக்கு தொடர்பு இருந்தது.  இப்பின்னனணியில் மீனாம்பாளுக்கும் நீதிக்கட்சி தொடர்பு இருந்துவந்தது. மீனாம்பாள் தரும் குறிப்பின்படி ராஜாஜி அரசின் இந்திப்பட அறிமுகத்தின்போது ஈட்டுக்குவந்த சி.டி.நாயகம் ராஜாஜியின் செயலை பிராமணர் அரசியலாக விளக்கியதின் தொடர்ச்சியில் அப்போராட்டத்தில் மீனாம்பாள் ஈடுபாடு காட்டத் தொடங்கினார் என்று தெரிகிறது.  அதாவது பிராமண எதிர்ப்புக்கு கருத்தின் தொடர்ச்சியிலேயே அவரின் போராட்ட ஈடுபாடு தொடங்கியதாக இதுவரையிலான குறிப்புகள் வழி அறிய கிடைக்கிறது.  அதேவேளையில் பின்னர் தொடர்பும் இல்லாமல் இருந்ததும் நடந்திருக்கின்றது.

1937 ஆகஸ்ட் 10ல் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று ராஜாஜி பேசியது முதல் தமிழகமெங்கும் சவைத்த தமிழறிஞர்களால் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு சென்னை நகரை மையமாகக் கொட்டபோதுதான் போராட்டம் மறியல், கைது என்று அடுத்த கட்டத்திற்குச் சென்றது அதாவது போராட்டம் அதுவரை பேசி முன்னெடுத்த வந்த புலமைக் குழாத்தினரிடமிருந்து மக்கள் திரள் போராட்டமாக மாறியது.  

சென்னை நகரத்தின் இந்தி எதிப்ப்புப் பிரச்ச்சார பொறுப்பை மீனாம்பாள் சிவராஜ் ஏற்றிருந்தார்.  கற்றறிந்தவர்களின் கருத்தியல் பிரச்சாரமாக இருந்த எதிர்ப்பு வெகுமக்கள் போராட்டமாக மாறியதற்கு மீனாம்பாள் பங்கு முக்கியமானதாக அமைந்தது.  அவரது தலைமையில் ஏராளமான ஆதிதிராவிடர்கள் இந்தி எதிர்ப்புத் தொண்டர்களாகப் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.  

மீனாம்பாள் அவர்கள் எதனையும் நேருக்கு நேராய் கேள்வி கேட்கும் மனத்திடம் படைத்தவராய் இருந்தார்.  அவரின் மனத்திடத்திற்கு ஒரு ஆதாரமாய் இருப்பது மொழிப்போராட்டத்தின் போது "இராஜமகேந்திரபுரம் ஸ்டாலின் ஜெகதீசன் அவர்களின் உண்ணா நோன்பு" குறித்த நிகழ்வு ஓன்று.

ஜெகதீசன், 1938 மே 1 முதல் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.  1938 ஜூன் 10ல் சென்னையில் நடைபெற்ற கூட்டமொன்றில் "இந்த ஜெகதீசன் இறந்தால், அவர் பிணத்தை எங்கு வைத்துக் கொளுத்துவது என்வதைத்தான் இப்போது யோசிக்க வேண்டும்.  இறந்த ஜெகதீசனை முதன் மந்திரி வீட்டில் வைத்துக் கொளுத்துவதா அல்லது யார் இறந்தாலும் இருக்கட்டும் எனக்குக்கவலையில்லை என்று கூறும் கவர்னர் மாளிகைக்கு முன்வைத்துக் கொளுத்துவதா என்பதே கேள்வி" என்று அண்ணாத்துரை உரையாற்றினார்.

முதலில் இந்த உண்ணாநோன்பு தி.நகர் செ.தெ. நாயகம் இருப்பிடத்தில் தொடங்கப்பட்டதாகவும் பின்னர் மீனாம்பாள் வீட்டிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.  பெரியாரும் ஜெகதீசனை மீனாம்பாள் வீட்டில் சந்தித்திருக்கின்றார்.  ஜெகதீசன் பகலில் உண்ணாமலும் இரவில் யாருக்கும் தெரியாமல் உணவு உட்கொள்பவராகவும் இருப்பதை மீனாம்பாள் அம்பலப்படுத்தினார்.  இதனால் போராட்டக் காரர்களுக்கு மீனாம்பாள் மீது அதிருப்தி ஏற்பட்டது.  இதைப்பற்றி பெரியாரும் மீனாம்பாளும் பேசிக்கொள்ள முடியாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.  ( பின்னாளில் பெரியார் ஜெகதீசனை "காங்கிரசின் ஒற்றர்" என்று குறிப்பிட்டதாக அறிய முடிகிறது )

1938 நவம்பரில் இந்து தியோலாஜிக்கல் உயர்நிலைப்பள்ளி முன் நடந்த மறியலில் முதன்முதலாக மகளிரும் பங்கேற்றனர்.  இதற்குப்பின்னர் நடந்த மாநாடு ஒன்றி மூலம் போராட்டம் முழுமையாக பெரியார் தலைமைக்கு சென்றது.

Annai Meenambal in the Chennai Meeting
அன்னை மீனாம்பாள் சென்னை மாநாட்டில்


இந்தி எதிர்ப்பையொட்டிச் சென்னையில் 13.11.1938ல் தமிழ்ப் பெண்கள் மாநாடு நடந்தது  இதில் "திருவரங்கம் நீலாம்பிகையம்மையார், தருமாம்பாள், ராமமிருதம் அம்மையார், பண்டிதை நாராயணி அம்மியார் இன்ன பிறர்" கலந்து கொண்டனர்.  இம்மாநாட்டு ஒருங்கிணைப்பில் பெரும்பங்களித்தவர் மீனாம்பாள்தான்.  சென்னை நகரில் பெண்களைத் திரட்டியதில் அவர் பங்கு முதன்மையாயிருந்தது.  மாநாட்டுக்கோடியை அவர்தான் ஏற்றினார்.  இம்மாநாட்டில் தான் ஈவெராவிற்கு "பெரியார்"எனும் பட்டம் மீனாம்பாள் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, வழங்கப்பட்டது.  

"தீண்டாமையை ஒழிப்பது ஆண்களை விட பெண்களின் கையிலேயே உள்ளது" என்று 1927ல் டிசம்பர் 25ல் மனுஸ்ம்ரிதியை எரித்து உரையாற்றிய பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் அன்னை மீனாம்பாளை சகோதரி என்றே பாசத்துடன் அழைத்தார்.


தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் முதல் தலைவராக பதவி வகித்தார். 1944ல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்தியா பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டை தலைமைதாங்கி நடத்தினார்.  அம்மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் கலந்துகொண்டார்.

மே 6, 1945ல் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டிற்கும் அன்னை மீனாம்பாள் தலைமை தாங்கினார்.  அந்த மாநாடு நிறைவடைந்த பின்னர், பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் அவர்கள் அவர் வீட்டில் அவரே சமைத்து உணவளித்ததை மீனாம்பாள் நினைவுகூர்ந்திருப்பதாக அறிய முடிகிறது.

சமூகத்தலைவராக மட்டுமில்லாமல் அன்னை அவர்கள், துணைமேயர், ஆனரி பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் , சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் , தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர், சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் , போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர் , S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்), சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் , சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை, பதவிகளை வகித்தார். 

நூற்பட்டியல்:
"இந்தி எதிர்ப்புப் போராட்டம் : தலித் தலைமையும் தமிழ் அடையாளமும்" நூல்: எழுதாக் கிளவி, காலச்சுவடு பதிப்பகம்