பெளத்தம் ஏற்பு 15.08.2025 வெள்ளி
அரசியல் விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 அன்று சமூக விடுதலை பெறுவதற்காக பெளத்தம் ஏற்பு நிகழ்வினை நிலாதம்மா ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வானது பல்லாவரம் என்றழைக்கப்படும் பல்லமலை மீது அமைந்துள்ள அருள்நிலை புத்தவிஹாரில் நடைபெற்றது.
நிகழ்வானது மாலை 06 மணி அளவில் ஆரம்பம் ஆனது. நிகழ்வினை நிலாதம்மாவின் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான உபாசகி பிரியா தொகுத்து வழங்கினார். பெளத்த வாழ்வின் அடிப்படை குறித்து எடுத்துக் கூறினார். பெளத்தமேற்ற குடும்பங்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஏற்கனவே பெளத்தமேற்ற குடும்பங்களின் உறுப்பினர்கள் தங்களது பெளத்த வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக, நிலாதம்மா தலைமைக்குழு உறுப்பினர் அனுசுயா பேசுகையில் “பெளத்த வாழ்வியலில் மெழுகுவர்த்தி ஏத்துவது, ஊதுவத்தி கொழுத்துவது, பூக்கள், பழங்கள் வைப்பது எல்லாம் விமர்சனமாக பார்க்கப்படுகிறது. இங்கே எதுவும் கட்டாயமில்லை. ஆனால், சில விசயங்களை நாம் அறிவியலோடும் உளவியலோடும் உடன்பட்டு தான் செய்யப்படுகிறது. நிலையாமையை குறிப்பதற்கும், உனக்கு நீயே ஒளியாக இரு என்பதற்கும் இவையெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்தார்.
நிலாதம்மாவின் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான உபாசகி சுமதி பேசுகையில் “இயல்பாகவே கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு, தாலியின் மீதெல்லாம் பெரிய செண்டிமெண்ட் இல்லை. ஆனால் தாலி போடாமல் இருப்பதை அடிக்கடி யாராவது குறிப்பிட்டு பேசும் போது, என்னையவே அறியாமல் என் கணவருக்கு எதாவது ஆகி விடுமா என்ற எண்ணம் முன்னொரு காலத்தில் இருந்தது. கூடுவாஞ்சேரி பெளத்த மாநாட்டில் பெளத்தமேற்ற பிறகு எனக்கு அந்த பயமெல்லாம் சுத்தமாகப் போய் விட்டது. என் கணவர் இலக்கியனும் பெளத்த வாழ்வினை நம்பி கடைப்பிடிப்பதால் எங்களது குடும்பம் பெளத்த வாழ்வியலை பின்பற்றும் குடும்பமாகவே உள்ளது” என்றார்.
நிலாதம்மாவின் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான உபாசகி கோகிலா பேசுகையில் “பெளத்தம் என்பது முழுமையான விழிப்புணர்வோடு இருத்தல், நமது சொல்லில் செயலில் எந்த அளவிற்கு நாம் விழிப்புணர்வோடு இருக்கிறோமோ அதன் வழியாகவே நமக்கு வாழ்வியல் மீதான அனுபவம் கிட்டும், பெளத்த வாழ்வியலில் இது ஒரு முக்கிய கூறாக இருக்கிறது” என்றார்.
விஹாரின் நிர்வாகிகளில் ஒருவரான மூத்த உபாசகர் அய்யா பேசும் போது “நிலாதம்மா குழுவினர் இங்கே வரப்போகிறார்கள் என்றதுமே எங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும், கிட்டத்தட்ட ஒரு கல்யாணத்தை கொண்டாடப் போகிற மனநிலைக்கு வந்து விடுவோம், தொடர்ச்சியாக அவர்கள் எப்போதும் வந்து இங்கே இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் அதற்கு உறுதுணையாக இருப்போம்” என்றார்.
நிகழ்வில் பெளத்தமேற்றவர்கள் மனதளவில் விடுதலை அடைவதற்கும், இந்து மதம் தன்னை நடத்துகிற படிநிலைகளிலிருந்தும் மீள்வதற்காகவே பெளத்தம் ஏற்க வந்தோம், ஏற்ற பிறகு கிடைக்கிற மன உணர்வு அலாதியான மகிழ்ச்சியை மன நிறைவை உண்டு பண்ணுகிறது என்று தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
நிலாதம்மாவின் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான உபாசகி சங்கீதா மாணவர்கள் வரைந்த பெளத்தம், அம்பேத்கரியம் தொடர்பான புகைப்படங்களை காட்சிப்படுத்தியிருந்தார். அது வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. நிலா தம்மா ஒருங்கிணைத்த கடந்த பெளத்தமேற்பு நிகழ்வில் பெளத்தம் ஏற்ற சங்கீதா கவிதை ஒன்றினை வாசித்தார். அது அனைவரையும் நெகிழ்வடையச் செய்தது.
நிகழ்வில் நிலக்கடலையும், தேநீரும், பழங்களும் தானமாக வழங்கப்பட்டது. பாடல்களை கரும்பிடாரி கலைக்குழு பாடகர்கள் பாடி, பறை இசைத்து மகிழ்வித்தார்கள். நிகழ்வானது இரவு 08 மணி அளவில் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment