மாசித் திங்கள் ( Febraury ) பௌர்ணமி

நீண்ட காலம் வெற்றி நடைபோடும் சமய குழுவினால் ( சங்கம் ) புத்தர் தன்னையும்  உயர்ந்த குழுவினையும் திருப்தியடையச் செய்தார்.  புத்தர் 80வது வயதில் கடமைகள் எல்லாம் முடிந்தது என்று உணர்ந்தார்.  அவர் மெய்யார்வம் கொண்ட சீடர்களாகிய இல்லறத்தார், வீடற்ற நிலையிலுள்ளவர்கட்கும் இன்றியமையாத செயல்துறைக் கட்டளைகளைத் தெளிவுபடுத்தினார்.  அவர்களும் தன்னுடைய போதனைகளில் உறுதியாகவும் மற்றும் மற்றவர்கட்கும் விவரமாக எடுத்துக்கூறவும் தகுதியடைந்தனர்.  ஆகையினால் அவர் தன்னுடைய மீத  நாட்களை மன உறுதியினால் கட்டுப்படுத்த முடிவு செய்ய விருப்பமில்லாமல் அரகத்தின் முழு ஆதாயம் அனுபவித்து வந்தார்.



மாசித்திங்கள் பௌர்ணமி நாளன்று சாபால சைத்தியம் வசிக்கும் தருணம் புத்தர் இன்று முதல் இன்னும் மூன்று மாதங்களில் இறந்து விடுவதாக வணக்கத்திற்குரிய ஆனந்தரிடம் அறிவித்தார்.

வணக்கத்துக்குரிய ஆனந்தர் புத்தர் கூறியதை உடனே நினைவு கொண்டு அவர் எல்லோருடைய நன்மை, செழுமைக்கும் 100 வருடங்கள் வாழும்படி வேண்டினார்.  புத்தர் தன் பதிலில் "ஆனந்தா, ததாகதரை கெஞ்சிக் கேட்டது போதும்.  அப்படிப்பட்ட வேண்டுகோளுக்கு இப்போது நேரம் கடந்து விட்டது" என்றார்.

அதன்பிறகு அவர் விரைவில் செல்லும் வாழ்க்கையின் இயற்கை ஆற்றல் பற்றிப் பேசி, வணக்கத்துக்குரிய ஆனந்தருடன் மஹாவன கோபுரமுகடு அரை சென்று வைசாலி அருகாமையிலுள்ள எல்லா பிக்குகளும் ஒன்று கூடும்படி வேண்டுகோள் விடுத்தார்.  ஒன்று கூடிய பிக்குகளிடம் கீழ்வருமாறு சொற்பொழிவாற்றினார்.

எந்தெந்த உயர் உண்மைகளை நான் விவரமாக உங்களுக்கு எடுத்துச் சொன்னேனோ அவைகளை நன்கு படித்து செயல்முறையில் பழகிக் கவனம்செலுத்தி இந்த புனித வாழ்க்கை நீடித்து வளரச் செய்யவும், உலகத்திலுள்ள எல்லா உயிரினங்கள் மீதும் கருணையை நிலை நாட்டவும், மக்கள் தெய்வங்கள், பண்பையும் மகிழ்ச்சியடையவும் வளரச் செய்யுங்கள்.  அந்த உயர்நிலையான உண்மைகள்.

1) சிந்தனையின் 4 ஆதாரங்கள் 
2) நன்முயற்சியில் 4 வகைகள்
3) சமூக வாழ்வில் ஒருவருக்கு நிறைவு தரும் அறிவு பெற 4 துணைப் பொருட்கள்
4) செயலுரிமை 5 காரணங்கள்
5) ஆன்மிக ஆற்றல் பெற 5 காரணங்கள்
6) அறிவு ஒளிபெற  காரணக் கூறுகள்
7) உயரிய எண் வழிப்பாதை

அதன்பிறகு அவர் இறுதி சொற்பொழிவாக இறக்கும் நேரமும் வெளிப்படையாக சங்கத்திற்கு தெரியப்படுத்தினார்.

ஓ! உபாசகர்களே ( பிக்குகளே ) கவனியுங்கள்.  உங்களிடம் பேசுகிறேன்.  தோன்றுவனவெல்லாம் அழியும் தன்மையுடையன.  விழிப்புடன் உங்கள் விமோசனத்திற்கு முயற்சி செய்யுங்கள்.  ததாகரின் இறப்பு வெகு தொலைவு இல்லாமல் கூடிய சீக்கிரமே ஏற்படும்.  இன்றிலிருந்து சரியாக மூன்றாவது மாத முடிவில் ததாகதர் இறப்பார் என்று உறுதிப்படுத்தினார்.

************
நூல் : புத்தரும் முழு நிலவும்
ஆசிரியர் : பொறியாளர் ஏ. அசோகன்
வெளியீடு : திரிபீடக தமிழ் நிறுவனம், சென்னை.


பிறை வளர்ந்த கதை…

ஐந்து வருடங்களுக்கு முந்தைய மதியப்பொழுது, சரியாக சொல்வதானால், 2012ம் வருடத்தின் ஜுன் மாதம். அண்ணல் பாபாசாகேப்யையும், அவர் காட்டிய  வழியில் பெளத்த நெறியை தேடும் உபாசகர்கள் குடும்பமாக அமர்ந்து, பவுத்தத்தை அறிந்து கொள்ளும் விதமாக, இனி வரும் ஒவ்வொரு  முழுநிலவு நாளிலும் பாபாசாகேப்   மணிமண்டபத்தில் குடும்பமாக கூடி, பெளத்த உரையாடலை நிகழ்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அம்முடிவு அடுத்த மாதமே, அதாவது ஜுலை மாதமே செயல் வடிவத்திற்கு வந்தது.  இன்று ‛நிலா தம்மா குழு’  என ஒரு முழுநிலவு போல் வளந்திருக்கும் அந்த  பெளத்த பண்பாட்டு குழு, தன் வளர்பிறையின் முதல் அடியை இப்படி தான் தொடங்கியது. அப்போதைய நோக்கம் மணிமண்டபத்தில் குடும்பமாகக் கூடுவது மட்டுமே! 

வரலாற்றின் எல்லா காலங்களிலும் தவறாமல் நடக்கும் வேடிக்கைகளில் ஒன்று, அதிகாரத்திற்கு எதிர்வினை புரியும் தவிர்க்க முடியாத ஆளுமைகளை,  தொடர்ந்து இருட்டடிப்பு செய்வது. பத்தொன்பது, இருபதாம் நுாற்றாண்டின் தன்னிகரில்லா ஆளுமையான அண்ணல் பாபாசகேப் அம்பேத்கரையும், சமத்துவ சமூகத்திற்காக அவர் பின்பற்றிய பெளத்தத்தையும் இந்த 21ம் நுாற்றாண்டில் இருட்டடிப்பு செய்வது. இதை மிகச் சரியாக செய்து கொண்டிருக்கிறது, அதிகாரம்!

நாடு முழுவதும் லட்சத்திற்கும் அதிகமாகன சிலைகளை உடைய அத்தலைவனுக்கு முக்கிய  நகரங்களில் மணிமண்டபம் கட்டி, அதை பராமரிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வது அதிகாரத்தின் இருட்டடிப்பில் ஒரு வடிவம். அப்படி சென்னையில் இருக்கும்  மணிமண்டபத்தை, நமக்காக ஆக்கப்பூர்மான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே நிலா தம்மா பவுர்ணமி குழுவின் ஆரம்ப கூடுகையின் நோக்கம். 

நாம் முதல் அடியை எடுத்து வைக்கும் போதே நமக்கான  பாதை நம் முன் விரிந்து விடுகிறது. தொடக்கத்தில் கூடுகை என்ற நிலையிலிருந்து மெல்ல பண்பாட்டு தளத்திற்கு நுழைந்தது ‛நிலா தம்மா’. பெண்களும் குழந்தைகளுமே அப்பயணத்தை முன்னெடுக்க தொடங்கினார்கள்.

தங்களுக்கான விடுதலை பாடல்களை தாங்களே எழுதுவது, நாடகங்கள் புனைவது என குழந்தைகள் தங்களை உணர்ந்து விரைவாக வளரத் தொடங்கினர். அதற்கான வலிமையை பெளத்தம் அவர்களுக்கு தந்தது. .



பண்பாட்டு தளத்தில் பயணம் என்று முடிவான பின் அடுத்து எடுத்த தீர்க்கமான முடிவு, ஐந்து லட்சம் மக்களுடன், பாபாசாகேப் பவுத்தம் ஏற்ற, ‛தீக்க்ஷா பூமி’க்கு செல்வதே! நம் வரலாறுகளை சரியாக உள்வாங்கிக் கொண்டு வளரும் வளர்ச்சிதான் நீடித்து நிற்கும். அதன்படி, நிலா தம்மா குழு 2015ம் ஆண்டு 32 உபாசகர்களுடன் முதல் முறையாக அப்புண்ணிய பூமிக்கு பயணம் மேற்கொண்டது. அப்பயணம் தந்த படிப்பினை, அடுத்த வருடத்தில் 110 உபாசகர்களுடன் தொடர்ந்தது; இனியும்  தொடரும்!

ஆரம்பத்தில் பாடல்கள், நாடகங்கள், கலை நிகழ்வுகள் என விரிந்த  நிலா தம்மாவின் பயணம், இன்று வாரந்திர திரையில் என்று காட்சி கலையிலும் கால் பதித்து, பண்பாட்டின் அனைத்து கிளைகளிலும்  பரவத் தொடங்கியிருக்கிறது.

பண்பாட்டை மீட்டெடுத்தலே, பெளத்த புரட்சியின் அடிப்படை என்பதை நன்கு  உணர்ந்திருக்கும் ‛நிலா தம்மா குழு’ அதற்காக எடுத்து வைத்திருக்கும் வலிமையான முதல் அடி, ‛கரும்பிடாரி கலைக்குழு’. அக்கினி தெய்வம், கண்ணகியின் மறுஉருவம் என்று சனாதன இந்து மதம் எத்தனை சாயங்கள் பூசினாலும் அம்மூத்த தேவி, எங்கள் குலமுதல்வியே என தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் போரை பறை முழங்குகின்றனர்  கலைக்குழு குழந்தைகள்.

சின்ன சின்னதாக எடுத்து வைத்த எங்கள் அடிகளுக்கு வெளியிலிந்து தங்களின் ஆதரவு தந்தவர்கள் ஏராளமானோர். மணிமண்டபத்தின் காவலாளியிலிருந்து, சமூதாயத்தில்  உயர் அந்தஸ்தில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவரின் உதவியும் இல்லாமல் இந்த ஐந்து வருட பயணம் சாத்தியம் இல்லை. அந்த எல்லா நல்லுள்ளங்களுக்கும்  இந்த நேரத்தில் எம் பவுத்த வந்தனங்களை உரிதாக்குகிறோம். 

ஜெய்பீம்…! நமோ புத்தாய…!